சென்னை
5 மெட்ரோ ரெயில்நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி
|5 மெட்ரோ ரெயில்நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி சேவை நந்தனத்தில் தொடங்கிவைக்கப்பட்டது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, நந்தனம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ராஜேஷ் சதுர்வேதி நிருபர்களிடம் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் பெண் பயணிகளின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை தொடங்கி உள்ளது. நிலையான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களால் இயக்கப்படும் இந்த பைக் சேவை வசதி முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில்நிலையங்களில் இயக்கப்படுகிறது. பின்னர் தேவையின் அடிப்படையில் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடர்வண்டி மற்றும் இயக்கப்பிரிவு கூடுதல் பொதுமேலாளர் சதீஷ்பிரபு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரேபிடோ பைக் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.