திருவள்ளூர்
திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
|திருத்தணியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெண்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ்பாபு, மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அகூர் காலனியில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.