விழுப்புரம்
விக்கிரவாண்டியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
|விக்கிரவாண்டியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
அலைக்கழிப்பு
விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் ஏழை, எளிய பெண்கள் தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும், உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்களது செல்போன் எண்களுக்கு குறுந்தகவல்கள் வரவில்லை. இதையடுத்து மேல்முறையீடு செய்த பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, அவர்கள் சரிவர பதில் சொல்லாமல் அலைக்கழித்ததாக தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை அங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை அலைக்கழித்த அதிகாரிகளை கண்டித்தும், தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணைத் தலைவர் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. விரைவில் மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.