நாமக்கல்
ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணிடம் 3 பவுன் நகைப்பறிப்பு மோட்டார்சைக்கிளில் தப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு
|ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணிடம் 3 பவுன் நகைப்பறிப்பு மோட்டார்சைக்கிளில் தப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு
ராசிபுரம்:
ராசிபுரத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்
ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடைய மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பகலில் வளர்மதி கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் வளர்மதியிடம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியை கேட்டார். பின்னர் வழியை கேட்டு விட்டு சென்ற அந்த நபர் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது வளர்மதி செல்போன் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
வலைவீச்சு
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் திடீரென வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.