தர்மபுரி
காப்புகாட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
|அரூர்:-
அரூர் அருகே காப்புகாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு மாயமான மாணவியா? என்று கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காப்பு காட்டில் எலும்புக்கூடு
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ்.அம்மாபாளையம் காப்புக்காடு பகுதியில் கோட்டப்பட்டி வனக்காப்பாளர் தண்டபாணி தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள கல்மடுவு ஓடையில் அடையாளம் தெரியாத மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரூர் போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்பு கூட்டை கைப்பற்றினர். அந்த எலும்புக்கூடு ஆணா?பெண்ணா? என்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே மரத்தில் ஒரு துப்பட்டா தொங்கியது. அதன் கீழ் பகுதியில் கால் கொலுசு, வளையல் ஆகியவை இருந்தன. இதனால் எலும்பு கூடாக இருந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
மாயமான மாணவி
இதை தொடர்ந்து அண்மையில் அந்த பகுதியில் காணாமல் போன பெண்கள் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ஞானசவுந்தர்யா (வயது 17) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாயமாகி இருப்பது தெரிய வந்தது. பிளஸ்- 2 படித்து வந்த அவர் தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.
திருவிழா நடைபெறும் போது இவர் காணாமல் போனதாகவும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
டி.என்.ஏ. பரிசோதனை
இதையடுத்து காப்புக்காடு பகுதியில் எலும்புக்கூடு அருகே கிடைத்த பொருட்கள் யாருடையவை என்பது குறித்து காணாமல் போன மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ குழுவினர் மூலம் அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடு பாகங்கள் சேகரிக்கப்பட்டு டி.என். ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காப்புக்காடு பகுதியில் எலும்பு கூடாக கண்டறியப்பட்ட பெண் அந்தப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வெளியான பின்னரே எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டவர் யார்? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.