பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தீக்காயங்களுடன் உதவி கோரிய பெண் - விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிதியுதவி
|விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.
சென்னை,
பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர், உடலில் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் நடிகர் விஜய்யிடம் உதவி கோரியும், அவரை நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படை கட்சியினர், நடிகர் விஜய் அந்த பெண்ணுக்கு உதவி செய்யமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே நடிகர் விஜய் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், வரும் 15-ந்தேதிக்குள் விஜய் அந்த பெண்ணை சந்திக்காவிட்டால், வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டர்களின் வாசலில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும் அவருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். நடிகர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் இந்த உதவிகளை வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.