தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற பெண் - நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் ஆத்திரம்
|நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளியை மனைவி படுகொலை செய்தார்.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மணிமேகலை (27). இவர் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ரமேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி குழந்தைகள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பே அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ரமேஷ், மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வழக்கம் போல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை துன்புறுத்துவதால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து போதையில் படுக்கையில் கிடந்த ரமேசின் தலையில் போட்டார். மீண்டும் அதே கல்லால் அவருடைய முகத்தில் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர், கொலை செய்யப்பட்ட கணவரின் உடல் அருகேயே விடிய, விடிய மணிமேகலை உட்கார்ந்திருந்தார். நேற்று காலை மணிமேகலை, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சென்று, போலீசாரிடம் தனது கணவரை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்..
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் மணிமேகலையை போலீசார் கைது செய்தனர்.