கள்ளக்குறிச்சி
டிராக்டர் டயரில் சிக்கி பெண் பலி
|தியாகதுருகத்தில் டிராக்டர் டயரில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
தியாகதுருகம்,
சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 45). இவரது மனைவி பொன்னம்மாள் (40) கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த சிலருடன் டிராக்டர் டிப்பரில் செங்கல் ஏற்றும் வேலைக்காக சென்றார்.
இதில் மூரார்பாளையத்தில் இருந்து செங்கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி வேங்கைவாடி நோக்கி புறப்பட்டது. இதில் செங்கற்கள் மேல் பொன்னம்மாள் உள்ளிட்ட சிலர் அமர்ந்து இருந்தனர். தியாகை அருகே சென்ற போது சாலையில் உள்ள மேடு, பள்ளத்தில் டிராக்டர் ஏறி இறங்கியபோது, எதிர்பாராவிதமாக டிப்பரில் இருந்த செங்கற்கள் சரிந்து விழுந்தது. இதில் பொன்னம்மாள் டிராக்டர் டிப்பரில் இருந்து தவறி விழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் டிராக்டர் டயரில் சிக்கினார். இதில் டிராக்டர் டயர் ஏறி இறங்கியதில் பொன்னம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவரான பழனிச்சாமி மகன் சந்துரு (25) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.