< Back
மாநில செய்திகள்
பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் கத்தியால் குத்திக்கொலை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் கத்தியால் குத்திக்கொலை

தினத்தந்தி
|
21 May 2022 6:37 PM GMT

ஆம்பூர் அருகே மனைவி என நினைத்து பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மனைவி என நினைத்து பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). இவர் மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாம்பாள். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவரது கணவர் சுரேஷ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனலட்சுமி தனது 2 குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தேவேந்திரன் வியாபார விஷயமாக ஆம்பூருக்கு அடிக்கடி வந்தபோது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது இதனால் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு திருவண்ணாமலையில் வசித்து வந்தனர்.

தகராறு

இதற்கிடையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தனலட்சுமி ஆம்பூருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் தேவேந்திரன் மனைவியை அழைத்து செல்ல ஆம்பூருக்கு வந்தார். மாலை 4 மணி அளவில் ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள ஷூ கடை அருகே சாலையோரத்தில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த தனலட்சுமியை தன்னுடன் வரும்படி அழைத்தார். இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தனலட்சுமி வர மறுத்துள்ளார். பின்னர் தனலட்சுமி பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கினார்.

அப்போது அவரது பக்கத்தில் இளம்பெண் ஒருவர் படுத்து தூங்கினார். நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் தனது மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் தேவேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியுடன் அங்கு வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது அங்கு முகத்தை மூடித் தூங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தனது மனைவி எனக் கருதி கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அந்த பெண் கதறியதால் அவர் தனது மனைவி இல்லை என்பதை உணர்ந்தார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் தூங்கி கொண்டு இருந்த தனலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார். அவரை பார்த்ததும் தேவேந்திரன் ஆத்திரத்தில் தனலட்சுமியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதற்கிடையில் முதலில் கத்தியால் குத்தப்பட்ட பெண் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த தனலட்சுமியின் அபயகுரலை கேட்டு அருகில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து எழுந்து தேவேந்திரனை மடக்கிப்பிடித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

3 குழந்தைகளின் தாய்

இதில் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த நவீத் என்பவரின் மனைவி கவுசர் (27) என தெரியவந்தது. நவீத் கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்பூர் இந்திரா நகர் திருட்டு சம்பவத்தில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். இதனால் அவரது மனைவி கவுசர் ஆம்பூர் அருகே சாலையோரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது.

கொல்லப்பட்ட கவுசருக்கு 8 வயதில் மகள், 6 வயதில் மகன், 8 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைகள் 3 பேரும் பக்கத்தில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி உள்ளனர். தொடர்ந்து கவுசர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வியாபாரி கைது

மேலும் படுகாயமடைந்த தனலட்சுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆள்மாறாட்டத்தில் நடந்த இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் ஆம்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்