< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
20 July 2023 2:33 PM IST

மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வேதாசலம் பகுதியை சேர்ந்தவர், மணி. ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி தாயம்மாள் (வயது 51), இவர் தினமும் மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் அவர் வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பி நேற்று அதிகாலை ஐந்துரதம் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாயம்மாள் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அவரது கணவர் மணி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ஆய்வு

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாயம்மாள் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து ஐந்துரதம் சாலையில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மூலம் அவர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும், பின்புற சீட்டில் அமர்திருந்த வாலிபர் முககவசம் அணிந்தும், அந்த இரு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமலும் வந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்