கன்னியாகுமரி
பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
|மார்த்தாண்டம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
குழந்தையுடன் சென்ற பெண்
மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பொடுகல்விளையை சேர்ந்தவர் ஜெகன்ஜோஸ் (வயது 39), தொழிலாளி. இவருடைய மனைவி சுபிதா (35).
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுபிதாவின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருந்து வாங்குவதற்காக சுபிதா குழந்தையை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டத்துக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கி விட்டு இரவு பஸ்சில் ஏறி சாங்கையில் வந்து இறங்கினார். பின்னர் வீட்டுக்கு குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
9 பவுன் நகை பறிப்பு
அப்போது ஒரு ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். திடீரென அந்த மர்ம நபர்கள் சுபிதாவின் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபிதா திரு டன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வந்த ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து சுபிதா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை தேடி வருகிறார்.
சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.