< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
6 May 2023 6:44 PM GMT

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில், பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில், பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பஸ் நிைலயம் வந்தார்

குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறி வைத்து நகை பறிப்பு மற்றும் பணம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவரிடம் 11 பவுன் நகை பறிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மேலும் ஒரு பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கலைநகரை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி சூர்யா தேன் (வயது 31). இவர் நேற்றுமுன்தினம் இரவு சாமிதோப்பு செல்வதற்காக ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார்.

நகை பறிப்பு

பின்னர் அண்ணா பஸ் நிலையத்தில் சாமிதோப்பு செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சாமிதோப்பு செல்லும் பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏற ஏராளமானோர் முண்டியடித்து சென்றனர். கூட்ட நெரிசலுக்கு இடையே சூர்யா தேன் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அப்போது தனது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

பஸ்சில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் நகையை பறித்திருக்கலாம் என தெரிகிறது.

நகையை பறிகொடுத்த சூர்யா தேன் கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

இதற்காக பஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்