சென்னை
புழல் பெண்கள் சிறையில் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதிகள்
|புழல் பெண்கள் சிறையில் செல்ேபானை பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் பெண் சிறை காவலரை வெளிநாட்டு பெண் கைதிகள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு பெண் கைதிகள்
சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உகாண்டா நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா (வயது 32) மற்றும் மாலத்தீவை சேர்ந்த சம்சியா(30) ஆகிய 2 வெளிநாட்டு பெண்கள், போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பெண்கள் சிறையில் பெண் சிறை காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும் தங்கள் அறையில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.
சிறை காவலருக்கு அடி-உதை
இதனை பார்த்த சிறை காவலர், இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இருவரிடம் இருந்தும் செல்போன்களை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும், பெண் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறை தரப்பில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அவர்கள் யாருடன் பேசினார்கள்? எனவும், சிறை காவலரை தாக்கியது குறித்தும் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் பெண்கள் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தண்டனை சிறை
இதே போல் புழல் தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோட்டி என்ற கோடீஸ்வரன்(37) கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டு உள்ளார்.
இவரும் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதுபற்றியும் புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.