விருதுநகர்
மகளுடன் விஷம் குடித்த பெண்
|சிவகாசி அருகே மகளுடன் விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள செவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவருக்கு பொன்னழகு என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் முத்துக்குமார் குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த முத்துக்குமார், தனது மனைவியை பொது இடத்தில் வைத்து கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தம் அடைந்த பொன்னழகு வீட்டில் இருந்த குருணை மருந்து எடுத்து குடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவரது 13 வயது மகளும் குருணை மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் தாய், மகளை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொன்னழகு கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.