சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை: உயிரிழந்த பெண்ணின் தங்கை உள்பட 5 பேர் கைது
|சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 34). இவர், மின்சார ரெயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையை சேர்ந்த டக்கா மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இமானுவேல் (11), சோபியா (7) என 2 பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில் டக்கா மணி இறந்துவிட்டதால் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். ராஜேஸ்வரி ரெயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களாக ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலைய நடைமேடையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்த ரெயில் இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் நொடிப்பொழுதில் அந்த மர்மநபர்கள் தங்கள் கைகளில் வைத்திருத்த கத்தி மற்றும் அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, அதே ரெயிலில் ஏறி தப்பிச்சென்றனர். இதில், ராஜேஸ்வரியின் முகத்தில் 10 இடத்தில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரி உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜேஸ்வரியை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் உயிரிழந்த பெண்ணின் தங்கை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.