சென்னை
சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்: ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை சிகிச்சைக்காக தன்னுடைய காரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் துரித நடவடிக்கை எடுத்த அமைச்சரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று காலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்ட அவர், ஜோன்ஸ் சாலை வழியாக ஜாபர்கான்பேட்டை நோக்கி செல்லும் போது, ஜோன்ஸ் சாலையின் ஓரத்தில் கும்பலாக மக்கள் நிற்பதை பார்த்து உடனடியாக காரை நிறுத்தினார்.
காரில் இருந்து கீழே இறங்கிய அவர், அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுற்றி நின்றிருந்தவர்களிடம் என்ன ஆனது? என்று விசாரித்தார். அப்போது அவர்கள், மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில், துரித நடவடிக்கையாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் பயணித்து வந்த காரிலேயே அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், காயம் அடைந்து கிடந்த அந்த பெண்ணை தூக்கி காரில் ஏற்றினார்கள்.
கார் மின்னல் வேகத்தில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு சென்றது. முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்து இருந்தார். அதன்படி, அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தான் வந்த காரிலேயே சிகிச்சைக்காக அனுப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியனின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தன்னுடைய காரில் அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேறொரு காரை அந்த இடத்துக்கு வரவழைத்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் அந்த பெண், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராணி என்பதும், கடைக்கு வந்த இடத்தில் ரத்த அழுத்தம் குறைந்ததால், மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தலையில் 2 தையல்கள் போடப்பட்டுள்ளது.
சுயநினைவுக்கு திரும்பியதும், அந்த பெண், 'என்னை மருத்துவமனையில் சேர்த்த புண்ணியவான் யார்? என்று கேட்டதாகவும், அதற்கு அமைச்சர் உங்களை அவருடைய காரிலேயே சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும்' டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு அந்த பெண் 'நான் கொடுத்து வச்சவ' என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இன்று (புதன்கிழமை) அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பயன்பாட்டுக்கான உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா உள்பட பல்வேறு மருத்துவ வசதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.