திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
|திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பெண் பலி
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது 73). இவர் கடந்த 25-ந் தேதி இரவு பட்டரைபெரும்புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி இந்திராணி மீது மோதியது.
இதில் இந்திராணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இந்திராணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் நகரில் வசிப்பவர் கங்கம்மாள் (வயது 50). இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவரை விஷ பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து விஷம் உடல் முழுவதும் பரவியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு கடித்து பலியான கங்கம்மாள் உடலை கைப்பற்றிய பிரதே பரிசோதனைக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.