பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியதால் விபரீதம்
|பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது, செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்தார். கோகிலா கபிஸ்தலத்தில் வாட்ச் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று அவர் கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதையடுத்து கடை முழுவதும் தீப்பற்றி எறிந்தது. பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கபிஸ்தலம் போலீசார், கோகிலாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.