விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
|திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் உயிாிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை நேற்று காலை மேய்ச்சலுக்காக ஏாியில் விட்டு இருந்தார்.
பின்னர் மாலை 3 மணியளவில் அந்த மாட்டை அவர், மீண்டும் வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பசுமாடும் செத்தது.
2 மாடுகள் செத்தன
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மின்னல் தாக்கியதில் கொத்தனூரை சேர்ந்த பலராமன் மனைவி பூங்கொடி என்பவருக்கு சொந்தமான மாடு, துலுக்கப்பாளையத்தை சேர்ந்த தேசிகன் என்பவருக்கு சொந்தமான மாடும் செத்தது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.