< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி பெண் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி

தினத்தந்தி
|
3 May 2023 12:30 AM IST

எரியோடு அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார். அவருடைய 2 பசு மாடுகளும் பரிதாபமாக இறந்தன.

பலத்த மழை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி தேவி (வயது 55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரை இறந்துவிட்டார். தேவி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். அங்கு 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை எரியோடு மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது தேவி, தோட்டத்து வீட்டுக்கு பின்புறம் மழையில் நனைந்து கொண்டு இருந்த பசுமாடுகளை கொட்டகையில் கட்டுவதற்காக சென்றார்.

மின்னல் தாக்கி பெண் பலி

அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தேவி உயிரிழந்தார். அவருடைய பசுமாடுகள் மீதும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தன. நேற்று காலை வழக்கம்போல தேவி வீட்டுக்கு பால்காரர் ஒருவர் சென்றபோது தேவி மற்றும் 2 பசுமாடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்