வெயில் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
|வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதாக சபிதா மாலிக், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் மாலிக் (வயது 35). இவர் தனது மனைவி சபிதா மாலிக் (28) மற்றும் 2 குழந்தைகளுடன் ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் கடந்த 5 மாதங்களாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சபிதா மாலிக் அதே பகுதியில் உள்ள தனியார் லுங்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதால் தன்னால் தாங்க முடியவில்லை. அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகிறது. எனவே தன்னை ஊருக்கு அழைத்துச்செல்லும்படி சபிதா மாலிக் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சில நாட்கள் பொறு ஊருக்கு போகலாம் என்று கூறினார். எனினும் வெயில் கொடுமையால் சபிதா மாலிக்கால் ஈரோட்டில் இருக்க முடியவில்லை.
சம்பவத்தன்று இரவு சரோஜ் மாலிக் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவருடைய மனைவி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சபிதா மாலிக் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.