திண்டுக்கல்
கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலி
|நிலக்கோட்டை அருகே, கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.
கார் டிரைவர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 37). கார் டிரைவர். அவருடைய மனைவி உதயசூரியா (30). இவர், நிலக்கோட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தற்போது பாண்டி, நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டின் மேற்கூரையில் கான்கிரீட் போடப்பட்டது. வேலை நடப்பதால் வெளிச்சத்துக்காக, வீட்டுக்குள் தற்காலிகமாக மின்விளக்கு ஒன்று எரிய விடப்பட்டிருந்தது.
மின்சாரம் பாய்ந்தது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி 2 பேரும் புதிய வீட்டுக்கு சென்றனர். அங்கு கட்டிடத்துக்கு குழாய் மூலம் பாண்டி தண்ணீர் பீய்ச்சி அடித்தார். அப்போது விளக்குக்கு பயன்படுத்திய வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்தது.
அதன் மீது தண்ணீர் பட்டவுடன், எதிர்பாராதவிதமாக பாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்த உதயசூரியா அதிர்ச்சி அடைந்தார். தனது கணவரை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளி விட்டார். இதில் உதயசூரியா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பெண் பலி
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே உதயசூரியா இறந்து விட்டதாக கூறினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மனைவி பலியான சம்பவம், நிலக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.