திருவள்ளூர்
வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு - மின்வயர் அறுந்து விழுந்ததில் பரிதாபம்
|வெங்கல் அருகே பலத்த மழையின்போது மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் பெண் பரிதாபமாக இறந்தார். ஒரு பசுமாடும் உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 56). கணவரை இழந்த இவர் மகன் ராமராஜனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை மெய்யூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது வீட்டின் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டை வசந்தா தனது வீட்டு வராண்டாவில் கட்டுவதற்காக கொட்டும் மழையில் வெளியே சென்றார்.
மாட்டை அவிழ்த்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சார வயர் ஒன்று அறுந்து பசு மாடு மற்றும் வசந்தா மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கி வசந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசு மாடும் உயிரிழந்தது. தனது தாயை காணவில்லை என்று வசந்தாவின் மகன் ராமராஜன் வெளியே வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி தாயும், மாடும் இறந்துபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவ இடத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஆகியோர் விரைந்து சென்று ராமராஜனுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து சென்று வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.