< Back
மாநில செய்திகள்
திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது

தினத்தந்தி
|
21 July 2023 4:31 PM IST

திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

வளத்தி கோவிலான்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வளத்தி கோவிலான் (வயது 70). இவருடைய மனைவி எழிலரசி (55). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்தனர். இவர்கள் வீட்டின் வாடகை பணம் ரூ.3 ஆயிரம் கொடுக்க முடியாமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பாக்கி வாடகை பணத்தை கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்களும் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் அடிப்பதாக கூறினார்கள். இதனால் வீட்டில் ஏதோ விபரீதம் நடந்திருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் சந்தேகம் அடைந்தார்.

உடனடியாக அவர், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது.

தனிப்படை

சமையல் அறையில் இருந்த பிளாஸ்டிக் பீப்பாயிலை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் வளத்தி கோவிலான் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் 'பிளாஸ்டிக்' கவரால் சுற்றப்பட்டு இருந்தது. அந்த பீப்பாயிலை சுற்றி ரத்தம் உறைந்திருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இந்த நிலையில் அவருடைய மனைவி எழிலரசி வீட்டில் இல்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.எனவே எழிலரசிதான் அவரது கணவர் வளத்தி கோவிலானை தீர்த்துக்கட்டிவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். உடனே எழிலரசியை தேடி பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பகவலன் மேற்பார்வையில் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், பெண் இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

தனிப்படை போலீசார் எழிலரசியின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிந்தனர். எழிலரசி தன்னுடன் வேலை பார்க்கும் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த தோழி வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அவரை நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். விசாரணை முடிவடைந்த பின்னர் எழிலரசி, திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கதிரவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் பெண்கள் சிறையில் நேற்று மாலை அடைக்கப்பட்டார்.

நடத்தையில் சந்தேகப்பட்டதால் கீழே தள்ளி கொன்றேன் - கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

எனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவரை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தப்பினேன்' என்று கைதான எழிலரசி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

15 வயது வித்தியாசம்

போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள பாங்கொளத்தூர் கிராமம் ஆகும். சிறு வயதிலேயே எனது பெற்றோரை இழந்துவிட்டேன். இதனால் நான் அனாதை ஆனேன். எனக்கு படிப்பு, திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் முறையாக நடக்கவில்லை. எனது மூத்த சகோதரி வீட்டில் தங்கியிருந்து தான் பிழைப்பு நடத்தி வந்தேன்.

எனது கணவர் வளத்தி கோவிலான் ஏற்கனவே திருமணம் ஆனவர். குழந்தை இல்லை. அவரது முதல் மனைவி இறந்த பின்னர் அவரும் அனாதையாகி விட்டார். கோவில்களில் உட்கார்ந்து பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார். நானும் அனாதை, அவரும் அனாதை. கோவில் ஒன்றில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறினார். அவருக்கும், எனக்கும் 15 வயது வித்தியாசம். இருந்தாலும் கடைசி காலத்தில் அவரோடு வாழ முடிவு செய்து திருமணம் செய்துகொண்டேன். நன்றாக தான் வாழ்ந்தோம். அவரால் வருமானமும் இல்லை. சுகமும் இல்லை.

கொலை செய்தது எப்படி?

வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. இதனால் நான் தனியார் கல்லூரி ஒன்றில் தூய்மை பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அதில் மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் கிடைத்தது. அதை கொண்டு தான் வாழ்ந்தோம். அவரால் எதுவும் முடியாது. ஆனால் அவர் எனது நடத்தையில் மட்டும் சந்தேகப்பட்டார். நான் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு தாமதமாக வரும் நிலை இருந்தது.

அதற்கு அவர், கேவலமாக பேசி திட்ட ஆரம்பித்தார். நான் பல முறை பொறுத்து பார்த்தேன். கடந்த 4-ந்தேதி அன்று வழக்கம் போல் நான் இரவு தாமதமாக வந்தேன். வழக்கம் போல் அவரும் என்னை கேவலமாக திட்டினார். பொறுமை இழந்த நான் அவரை கீழே பிடித்து தள்ளினேன். இதில் அவரது தலையின் பின்பக்கம் அடிபட்டு விட்டது. அப்படியே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார். நான் இதை எதிர்பார்க்கவில்லை.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பிளாஸ்டிக் பையில் அவரது உடலை சுற்றி பிளாஸ்டிக் பீப்பாயில் வைத்து மூடினேன். உடனடியாக வீட்டை பூட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கரணையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு பஸ் பிடித்து வந்துவிட்டேன். எனது கணவர் அவரது உறவினர் வீட்டுக்கு போய் விட்டதாக பொய் சொல்லி தோழி வீட்டில் தங்கி இருந்தேன். போலீசார் நான் தங்கி இருந்த இடத்தை எப்படியோ கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்