< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பெண் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பெண் சாவு

தினத்தந்தி
|
4 Oct 2023 11:02 PM IST

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பெண் இறந்தார்.

தக்கலை:

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பெண் பலியானார்.

குளத்தில் குளிக்கச் சென்றார்

தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திருமணமாகாத இவர் மூலச்சல் அருகே உள்ள அவரது சகோதரி டெய்சி ஆலிஸ் மிசி என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். அதிகாலையில் இவர் குன்னத்துகுளத்தில் குளிக்கச் செல்வது வழக்கம். அப்போது அவருக்கு சொந்தமான ஆவணம், பணம் போன்றவை அடங்கிய பையையும் எடுத்துச் செல்வாராம். அதன்படி நேற்று குளிக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பிணமாக மீட்பு

உடனே அவருடைய சகோதரி ஆர்தர் செல்வியை தேடி குளத்து பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு அவரை காணவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர் விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் விரைந்து வந்து தேடிய போது குளத்தில் ஆர்தர் செல்வி பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய கையில் தோள் பையும் மாட்டிய நிலையில் இருந்தது. அதிலிருந்த பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகமும் நனைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் ஆர்தர்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குளத்தில் குளிப்பதற்காக படித்துறையில் இறங்கிய போது ஆர்தர் செல்வி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

மேலும் செய்திகள்