< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி பெண் சாவு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் சாவு

தினத்தந்தி
|
10 Dec 2022 12:15 AM IST

குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சிறுவனும் பலியானார்.

குத்தாலம்:

குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சிறுவனும் பலியானார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மின்சாரம் தாக்கி பெண் சாவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா(வயது 45). திருமணமாகாத இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக சென்றார்.

அப்போது பலத்த காற்று வீசியதன் காரணமாக மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்து உள்ளது. இதை கவனிக்காத சந்திரா மின் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

காப்பாற்ற முயன்ற சிறுவனும் பலி

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(17) ஓடிச்சென்று சந்திராவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண்ணும், சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்