செங்கல்பட்டு
பஸ்சில் உயிரிழந்த பெண்; பரிதவித்த கணவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவி
|பஸ்சில் உயிரிழந்த பெண் உடலை ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து உயிரிழந்த பெண் உடலை அனுப்பி வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது62). இவரது மனைவி செல்வி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மரக்கடை மற்றும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். செல்வியின் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சொந்த ஊரான களக்காடு செல்ல முடிவு செய்தனர். ஆட்டோ மூலம் அருணாச்சலம், செல்வி இருவரும் கோயம்பேடு பஸ் நிலையம் சென்றனர். பின்னர் அங்கிருந்து நெல்லை செல்ல அரசு விரைவு பஸ்சில் ஏறினர். பஸ் சிங்கபெருமாள் கோவில் அருகே செல்லும் போது செல்வி மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த கண்டக்டர் உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பஸ் செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடையும்போது அங்கு வந்த 108- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செல்வியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். செல்வியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அருணாச்சலத்திடம் போதிய பணம் இல்லாததால் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து செல்வியின் உடலை களக்காட்டுக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டரின் செய்கையை அனைவரும் பாராட்டினர்.