< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்கணவருடன் விஷமாத்திரை தின்ற பெண் சாவு மாத்திரைகளை துப்பியதால் 2 குழந்தைகள் உயிர் தப்பின
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில்கணவருடன் விஷமாத்திரை தின்ற பெண் சாவு மாத்திரைகளை துப்பியதால் 2 குழந்தைகள் உயிர் தப்பின

தினத்தந்தி
|
22 Sept 2023 2:15 AM IST

நாகர்கோவிலில் கணவருடன் விஷம் தின்ற பெண் பலியானார். விஷ மாத்திரைகளை துப்பியதால் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கணவருடன் விஷம் தின்ற பெண் பலியானார். விஷ மாத்திரைகளை துப்பியதால் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.

வியாபாரத்தில் நஷ்டம்

நாகர்கோவில் தட்டான்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30), மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரூபா (28). இவர்கள் 2 பேரும் கடந்த 10.5.2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். ரூபா பி.ஏ. பட்டதாரி.

கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே அதை ஈடுசெய்யவும், வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் கடன் வாங்கியுள்ளார். அந்த வகையில் லட்சக்கணக்கில் அவர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும் அவரால் வியாபார நஷ்டத்தில் இருந்து மீண்டு வரமுடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்க தொடங்கினா். ஆனால் பிரவீன் கடனை அடைக்க முடியாமல் திணறினார்.

விஷ மாத்திரை தின்றனர்

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கனத்த மனதுடன் தன் மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பிரவீன், தன் மனைவி ரூபாவுக்கு தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரையை கொடுத்ததோடு தானும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சிறிது நேரத்தில் ரூபா மயங்கினார். இதை பார்த்த பிரவீன், தன் மனைவி இறந்து விட்டார் என்று நினைத்து கதறி அழுதார். மன கஷ்டத்தில் விபரீத முடிவு எடுத்து விட்டதை உணர்ந்த அவர் உடனடியாக வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் தன் சகோதரரிடம் சென்று தானும், மனைவியும் விஷம் தின்றதை கூறி கதறி அழுதார்.

மனைவி சாவு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பிரவீனையும், ரூபாவையும் மீட்டு பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உருக்கமான கடிதம் சிக்கியது

கடன் பிரச்சினையால் விபரீத முடிவை எடுத்த பிரவீன் விஷம் குடிப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், "எனது தொழில் நஷ்டத்தால் ரூ.10 லட்சத்துக்கும் மேல் கடன் வந்து விட்டது. அதை என்னால் கொடுக்க முடியவில்லை.

இதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் போன பிறகு எனக்கு சொந்தமானவற்றை விற்று கடனை கொடுத்து விடுங்கள்" என உருக்கமாக எழுதி இருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

குழந்தைகள் உயிர் தப்பினர்

முன்னதாக விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்த ரூபாவின் அருகே 2 குழந்தைகளும் அழுதபடி இருந்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கும் பிரவீன் விஷ மாத்திரை கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள் குழந்தைகளையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது குழந்தைகள் உடலில் லேசான விஷ தன்மை இருந்தது என்பது தெரியவந்தது. எனவே அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரவீன் குழந்தைகளுக்கு மாத்திரையை கொடுத்ததாகவும், ஆனால் குழந்தைகளுக்கு கசப்பு தன்மை ஏற்பட்டதால் அந்த மாத்திரையை அவர்கள் துப்பியதால் உயிர் பிழைத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தம்பதி விஷம் மாத்திரையை தின்றதில் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்