திருவள்ளூர்
மீஞ்சூரில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி
|மீஞ்சூரில் வீட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக பலியானார்.
மீஞ்சூர் அன்பழகன் நகரில் வசித்து வருபவர் மோகன் (வயது 61). இவர் துறைமுகப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது மனைவி உஷாராணி (55) கவனித்து வருகிறார்.
உஷாராணி நேற்று முன்தினம் வீட்டில் பின்புறத்தில் உள்ள கிணற்றில் மேல் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் உஷாராணி விழுந்ததாக கூறப்படுகிறது. கிணற்றில் விழுந்த அவர் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் உஷாராணியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டில் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு இந்த கிணற்றில் உஷாராணி இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து உஷாராணி உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.