காஞ்சிபுரம்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
|பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
தவறி விழுந்தார்
காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 69). கடந்த 3 மாதங்களாக வசந்தா கழுத்து வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வசந்தா தனது உறவினர் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் பேரம்பாக்கம் அருகே உள்ள நர்சிங்கபுரம் பஸ் நிலையம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த வசந்தா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
பலி
இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.