< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி - சாலையோரம் நடந்து சென்றபோது பரிதாபம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி - சாலையோரம் நடந்து சென்றபோது பரிதாபம்

தினத்தந்தி
|
14 Sept 2023 1:48 PM IST

பேரம்பாக்கம் அருகே சாலையோரம் சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 51). கடந்த 11-ந் தேதியன்று சாந்தி அப்பகுதியில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார்.

சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்த சாந்தி மீது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிற்காமல் அங்கிருந்து தப்பினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சந்தவேலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாந்தி நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.

இதைபோல கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது நொச்சிக்குப்பம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் கோகுல் (வயது 24). இவர், ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை இவர் ஆரம்பாக்கம் பஜாரில் மோட்டார் சைக்கிளில் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்