சென்னை
சுங்குவார்சத்திரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
|சுங்குவார்சத்திரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவர் தனது உறவினர் பவித்ரா (35) என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் மொபட்டில் வாலாஜாபாத் அடுத்த கோவளவேடு பகுதியில் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் ஆவடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் வந்த போது எதிரே வந்த மண் ஏற்றி வந்த லாரி சுதா ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த பவித்ரா படுகாயம் அடைந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தவேலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவர் பாபுவை கைது செய்தனர். சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு அதிகம் உள்ள சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.