< Back
மாநில செய்திகள்
காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்

தினத்தந்தி
|
25 Sept 2023 2:15 AM IST

வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்துள்ளார்.


வால்பாறை,


வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்துள்ளார்.


காட்டெருமை தாக்கியது


வால்பாறை அருகில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (53). இவர் பன்னிமேடு எஸ்டேட் ஆஸ்பத்திரியில் வார்டு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வள்ளியம்மாள் வழக்கம் போல நேற்று காலை 8.40 மணியளவில் தனது வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு தேயிலை தோட்டம் வழியாக குறுக்கு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேயிலை தோட்ட பகுதியில் பதுங்கியிருந்த காட்டெருமை திடீரென்று ஓடி வந்து வள்ளியம்மாளை முட்டி தூக்கியெறிந்து விட்டது. இதில் கால், வயிற்றில் பலத்த காயம் அடைந்த வள்ளியம்மாளை பன்னிமேடு எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக உருளிக்கல் எஸ்டேட் தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கிருந்து கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.


கண்காணிப்பு பணி


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் காட்டெருமைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். குறுக்கு பாதை வழியாக நடந்து செல்லும் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒசை எழுப்பிக் கொண்டோ, கையில் தடியை வைத்து தட்டிக் கொண்டோ செல்ல வேண்டும் என்று வனத் துறையினர் அறிவுறுத்தினர். காலை நேரத்தில் ஆஸ்பத்திரி பெண் பணியாளரை காட்டெருமை தாக்கிய சம்பவம் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்