சென்னை
சூதாட்டத்துக்கு கணவர் அடிமையானதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|சூதாட்டதால் குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்கு வைத்த பணத்தையும் கணவர் இழந்ததால் விரக்தி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் வசிப்பவர் சுரேஷ்பாபு (வயது 43). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என்று பொழுதை கழித்து வந்தார்.
இவருடைய மனைவி புவனேஸ்வரி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரனும் மகளின் குடும்பத்துக்கு உதவி செய்து வந்ததாக தெரிகிறது.
புவனேஸ்வரி, மகன் மற்றும் மகளின் பள்ளிக்கூட கட்டணத்துக்காக சிறிது சிறிதாக ரூ.20 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தார். சூதாட்டத்துக்கு அடிமையான சுரேஷ்பாபு, குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்கு வைத்து இருந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் எடுத்து சென்று சிந்தாதிரிபேட்டையில் நண்பர்களுடன் சூதாடி இழந்து விட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, சூதாட்டத்துக்கு அடிமையான கணவரால், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறதே? என அழுதபடி இருந்தார். பின்னர் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.