கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் - சமரச பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்
|கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்,
கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை குமரன் சாலையை சேர்ந்த முட்டை வியாபாரி செல்வி. இவர் மீன் வியாபாரி ஒருவர் தன்னைத் தாக்கியதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை குமரன் சாலை பகுதியில் அமைந்துள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அவரது குடும்பத்தினருடன் வந்து ஒலிபெருக்கி வைத்து கீழே இறங்கி வரச் சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அந்த பெண் கீழே இறங்கி வர மறுத்து அந்த மீன் வியாபாரியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.