பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பெண் அடித்துக்கொலை: கள்ளக்காதலன் வெறிச்செயல்
|இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 45). இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பழனிச்சாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் துறையூர் கலிங்கமுடையான்பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனிடையே பழனிச்சாமி தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த ரூ.5 லட்சத்தை மல்லிகாவிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அந்த பணத்தை பழனிச்சாமி திரும்ப கேட்டுள்ளார். அதற்கு மல்லிகா தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பழனிச்சாமி மல்லிகாவை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்த நிலையில் நேற்று பழனிச்சாமி மல்லிகாவுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அவர் நன்றாக தூங்கியதும் பழனிச்சாமி சுத்தியலால் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அதன்பின் பழனிச்சாமி துறையூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து, மல்லிகாவை கொலை செய்தது குறித்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.