செங்கல்பட்டு
வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது
|கூடுவாஞ்சேரி அருகே வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
தங்கச்சங்கிலி, கம்மல் மாயம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள ஒரு நகை கடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் நகை வாங்குவது போல் கடைக்கு சென்றார். நகை கடையில் இருந்த ஊழியர்களிடம் கம்மல், தங்கச்சங்கிலி போன்ற நகைகளின் டிசைன்களை காட்டுமாறு சொல்லியுள்ளார்.
இதை தொடர்ந்து ஊழியர்களும் கடையில் இருந்த நகை டிசைன்களை அந்த பெண்ணுக்கு மேஜை மீது வைத்து காட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண் நான் பார்த்த டிசைன் உங்கள் கடையில் இல்லை என்று கூறிவிட்டு கடையில் இருந்து வெளியே சென்று விட்டார். இதற்கிடையே நகை கடை உரிமையாளர் கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தபோது அதில் 3½ பவுன் தங்கச்சங்கிலி, கம்மல் போன்றவை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
3½ பவுன் நகை திருட்டு
இதை தொடர்ந்து அன்றைய தினம் யார்? யார்? கடைக்கு வந்து நகை வாங்கியுள்ளார் என்பது குறித்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்தபோது நகை வாங்குவதற்காக வந்த ஒரு பெண் நகைகளை வாங்குவது போல் நடித்து ஒரு தங்கச்சங்கிலி, ஒரு ஜோடி கம்மல் என மொத்தம் 3½ பவுன் நகைகளை திருடி தனது உடலில் மறைத்து கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் அடிப்படையில் தனி படை அமைத்து நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருடிய அந்த பெண்ணை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் சென்னை ராமாபுரம் மூகாம்பிகை நகர், 2-வது தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மனைவி பிரியங்கா (வயது 35) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் காயரம்பேட்டில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரியங்காவிடம் இருந்து 3½ பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பிரியங்காவை செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.