செங்கல்பட்டு
மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது
|கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
வியாபாரிகளுக்கு இடையூறு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 35). நரிக்குறவ பெண். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்று அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் அவர் குமுறும் வீடியோ வெளியானது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறி அங்குள்ள நரிக்குறவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் அந்த பெண்ணுக்கு பாசிமணி விற்க மாமல்லபுரம் கடற்கரை சாலையில் மாவட்ட கலெக்டர் மூலம் பங்க் கடை ஒதுக்கி தர ஏற்பாடு செய்யப்பட்டது. அஸ்வினி முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரை தவறாக பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக கடற்கரை சாலையில், தன் கடையில் பாசிமணி வியாபாரம் செய்யாமல் நடைபாதையில் உள்ள மற்ற வியாபாரிகளுக்கு இடையூறாக அவர்களின் கடைக்கு எதிரில் சாலையில் கடை விரித்து வியாபாரம் செய்ததாக தெரிகிறது.
தகராறு
இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் நதியா (37) என்பவர் கடந்த சில நாட்களாக சாலையில் கடை விரித்து பாசிமணி வியாபாரம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் நேராக சென்று தகராறு செய்த அஸ்வினி கொத்திமங்கலத்தில் இருந்து வந்து இங்கு எப்படி நீ பாசிமணி வியாபாரம் செய்யலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திர மடைந்த அஸ்வினி, அவரது தந்தை சேகர், தாயார் மாலா என 3 பேரும் சேர்ந்து நதியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன் பையில் வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து நதியாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்து, முதுகு, வயிற்றில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நதியா மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஏற்கனவே வியாபாரிகளை மிரட்டியதாக புகார் உள்ள நிலையில்,பெண் வியாபாரியை கத்தியால் வெட்டியதாக அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் கைது செய்தனர். நதியா செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.