சென்னை
மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி - பெண் கைது
|மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவை சேர்ந்தவர் மிசிரியா (வயது 40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மிசிரியா தன் மகனை டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இதையறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் மூலம் வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் அவருக்கு அறிமுகம் ஆனார். அப்போது சசிகலா, "எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் மூலம் உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதற்காக மிசிரியாவிடம் இருந்து சசிகலா ஆன்லைன் மூலம் சிறுக சிறுக ரூ.28 லட்சம் வரை பெற்றதாக தெரிகிறது. பின்னர் சசிகலா, மிசிரியாவின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் 'சீட்' கிடைத்தது போல போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மிசிரியா, தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார்.
மேலும் இந்த மோசடி குறித்து திரு.வி.க. நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.