திருவாரூர்
52 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடிய பெண் கைது
|52 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மறைத்து வைத்து நாடகமாடிய பெண்னை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:
52 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மறைத்து வைத்து நாடகமாடிய பெண்னை போலீசார் கைது செய்தனர்.
52 பவுன் நகை கொள்ளை
மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு லாவண்யா (வயது 35) என்ற மனைவி மற்றும் மகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றி வந்த அருணாச்சலம் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அருணாச்சலம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, மகளுடன் கடந்த மாதம் 28-ந்தேதி சோனாபேட்டை கிராமத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் வீடு திரும்பியபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 52 பவுன் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெண் கைது
தொடர்ந்து மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வடுவூரை சேர்ந்த முத்துஆனந்த், புதுச்சேரியை சேர்ந்த பிரபாகரன், வடலூர் பகுதியை சேர்ந்த வினோத் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்து 1½ பவுன் நகைகள், 2 செல்போன்களை மட்டுமே திருடியதாக வாக்கு மூலம் அளித்தனர்.
இதன் அடிப்படையில் புகார் கொடுத்த அருணாச்சலம் மனைவி லாவண்யாவிடம் மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடப்பட்டதாக சொல்லப்பட்ட 52 பவுன் நகைகளும் லாவண்யா தனது வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மறைத்து வைக்கப்பட்ட 52 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை மறைத்து வைத்து போலீசாரை ஏமாற்றி அலைக்கழித்த லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்தனர்.