முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - டிடிவி தினகரன்
|பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அதற்காக சமூகநீதியின் அடிப்படையையே சீர்குலைப்பதுபோல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உச்சநீதிமன்ற தீர்ப்பில்10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் பட்டியலிட்டிருக்கும் காரணங்களை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ளலாம்.
மேலும், தமிழகத்தில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது.
அதேநேரத்தில், இந்த 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும்" என்று கூறியுள்ளார்.