தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறுக - முத்தரசன் வலியுறுத்தல்
|தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 26.07.2024-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது. அதில் குறிப்பாக தொல்லியல் துறை தேர்விற்கும், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் பணிகளுக்கும் சமஸ்கிருத பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பது மிகுந்த வியப்பளிக்கின்றது.
சமஸ்கிருத பாடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் எதிலும் இல்லாத நிலையில், சமஸ்கிருத பட்டம் எவ்வாறு பெற முடியும்? அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தேர்வாணையம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது. அரசு தலையிட்டு, உடனடியாக தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு, மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.