தஞ்சாவூர்
தஞ்சை புதுஆற்றங்கரை நடைபாதையில் திருடப்படும் கம்பிகள்
|தஞ்சை புதுஆற்றங்கரை நடைபாதையில் திருடப்படும் கம்பிகள்
தஞ்சை புதுஆற்றங்கரை நடைபாதையில் கம்பிகள் திருடப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுஆறு
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்துவிடப்படும். இதில் புதுஆறு தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது.
இந்த புதுஆற்றில் காந்திஜிசாலையில் உள்ள பாலத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு கரையில் உள்ள நடைபாதை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
கம்பிகள் திருட்டு
இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகளை சிலர் திருடி சென்றுவிட்டனர். மறுகரையில் உள்ள நடைபாதை பயன்படுத்தப்படாமல் இருப்பதால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த நடைபாதையை போல் காந்திஜிசாலையில் உள்ள பாலத்தில் இருந்து பெரியகோவில் அருகே உள்ள புதுஆற்றுப்பாலம் வரை ஆற்றின் இருகரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதைக்கு பேரரசன் கரிகால்சோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலக பின்புற பகுதி, பழைய கலெக்டர் அலுவலக பின்புறம் வழியாகவும் இந்த நடைபாதை செல்கிறது. மற்றொரு கரையில் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வழியாக இந்த நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதையை பெரும்பாலும் யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால் மதுஅருந்துவது போன்ற செயல்கள் நடைபெற்றன.
அறிவிப்பு பதாகை
கரிகால்சோழன் நடைபாதை வழியாக பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்திற்கு எளிதாக சென்று வர முடியும் என்பதால் அந்த நடைபாதையை சுத்தப்படுத்தியதுடன், இந்த நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவதை தடுக்கும் வகையில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், இங்குள்ள பொருட்களை சேதப்படுத்துபவர்கள், நடைபயிற்சி செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள், சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த நடைபாதையை மக்கள் பெரும்அளவில் பயன்படுத்துவது இல்லை. இதனால் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள நடைபாதையில் உள்ள தடுப்புகளில் இருந்த இரும்புகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தினால் தொடர்ந்து ஒவ்வொரு கம்பிகளால் திருட்டு போய் கொண்டே இருக்கிறது.
மேம்பாலம் கீழ்பகுதி
அதுமட்டுமின்றி கரிகால்சோழன் நடைபாதையை இணைக்கும் வகையில் போடப்பட்டுள்ள நடைபாலத்தில் இருந்த கம்பிகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் நடைபாலத்தில் செல்பவர்கள் தவறி புதுஆற்றுக்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை வண்டிக்காரத்தெருவில் இருந்து மேரீஸ்கார்னர் வரை ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் மேரீஸ்கார்னர் பகுதியிலும், சாந்தப்பிள்ளைகேட் பகுதியிலும் உள்ள காலியிடங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த தடுப்புகளுக்கு மையப்பகுதியில் உள்ள காலியிடம் எந்த பயன்பாடும் இன்றி காணப்படுகிறது. ஆங்காங்கே தடுப்பு கம்பிகளையும் சிலர் திருடிச் சென்றுவிட்டனர்.
எதிர்பார்ப்பு
காலியாக உள்ள இடங்களில் செடிகளோ, பூச்செடிகளோ அமைத்து முறையாக பராமரித்து வந்தால் கம்பிகள் திருட்டு போவது தடுக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி கம்பிகள் திருட்டு போவதை தடுக்கவில்லை என்றால் தொடர்ந்து கம்பிகள் திருட்டு போய் கொண்டே தான் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கம்பி திருடர்களை பிடிப்பதுடன், நடைபாதை மற்றும் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் உள்ள காலியிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, புதுஆற்றங்கரையில் நடைபாதை அமைக்கப்பட்டு, ஆற்றுக்குள் யாரும் தவறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த தடுப்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் செல்வதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மது குடிப்பதற்காகவே கம்பிகள் திருடப்படுகிறது. இதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்றால் எல்லா கம்பிகளும் திருட்டுபோய்விடும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.