< Back
மாநில செய்திகள்
அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுஎடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதிசி.வி.சண்முகம் எம்.பி. பேச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுஎடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதிசி.வி.சண்முகம் எம்.பி. பேச்சு

தினத்தந்தி
|
24 July 2023 12:15 AM IST

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. பேசினார்.

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பசுபதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உழைத்தால் பதவி

பல்வேறு சோதனைகளை கடந்து இன்றைக்கு இரட்டை இலையை பெற்றுள்ளோம். கட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வழி நடத்துகிறோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 1¾ கோடி தொண்டர்களை நாம் பெற்றுள்ளோம். அ.தி.மு.க.வில் உழைத்தால் எந்த பதவியும் கிடைக்கும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி தான் உதாரணம். இன்றைக்கு தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கடந்த 2½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதனால் தாய்மார்கள் தி.மு.க. ஆட்சி மீது ஆத்திரத்தில் உள்ளனர். இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்கு பிறகு ஓராண்டு கழித்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

மக்கள் பலம்

ஆகவே நாம் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிடவேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பூத் கமிட்டி வாரியாக இளைஞர்கள், மற்றும் பெண்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். ஒரு சில நிர்வாகிகள் கட்சி பணியில் சுணக்கம் காட்டி வருகிறார்கள். அவர்கள் தீவிரமாக தொண்டர்களை அரவணைத்து கட்சி பணி ஆற்றிட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். நம்மிடத்தில் மக்கள் பலம் உள்ளது. கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகள் முடிந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். அதற்கான மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது.

மகளிருக்கு முக்கியத்துவம்

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக ஆக்கி எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்துவதுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து, அவரை தமிழக முதல்-அமைச்சராக்க வேண்டும். மேலும் கட்சி நிர்வாகிகள் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் நிர்வாகிகள் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை கட்சி உறுப்பினராக்குங்கள். இன்றைக்கு தி.மு.க. ஆட்சியின் அவல நிலையை மக்கள் மன்றத்தில் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் நாம் எளிதில் வெற்றி பெற முடியும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதி. இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் வண்டிமேடு ராமதாஸ், பூர்ணராவ், ஒன்றிய செயலாளர்கள் கே.ராமதாஸ், விநாயகமூர்த்தி, பெரும்பாக்கம் ராஜா, எசாலம் பன்னீர், பேட்டை முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், முன்னாள் அரசு வக்கீல்கள் தமிழரசன், வேலவன், ராதிகா செந்தில், நகர எம்ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் குமரன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர், நகர மன்ற உறுப்பினர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கோலியனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ஜி.சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்