கன்னியாகுமரி
குமரியில் 2-வது நாளாக நடந்தது: சங்குத்துறை கடற்கரையில் காற்றாடி திருவிழா; குடும்பம், குடும்பமாக வந்து கண்டுகளித்த மக்கள்
|குமரியில் நேற்று 2-வது நாளாக சங்குத்துறை கடற்கரையில் காற்றாடி திருவிழா நடந்தது. இதில் குடும்பம், குடும்பமாக வந்து மக்கள் பறந்த காற்றாடிகளை கண்டுகளித்தனர்.
நாகர்கோவில்,
குமரியில் நேற்று 2-வது நாளாக சங்குத்துறை கடற்கரையில் காற்றாடி திருவிழா நடந்தது. இதில் குடும்பம், குடும்பமாக வந்து மக்கள் பறந்த காற்றாடிகளை கண்டுகளித்தனர்.
காற்றாடி திருவிழா
கன்னியாகுமரி கடற்கரையில் முதன் முறையாக நேற்றுமுன்தினம் காற்றாடி திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். விழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த காற்றாடி இயக்குபவர்கள் பங்கேற்று பல வண்ண காற்றாடிகளை கடற்கரையில் பறக்கவிட்டனர். இதனை சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
2-வது நாளாக நேற்று சங்குத்துறை கடற்கரையில் மதியம் 2.30 மணிக்கு காற்றாடி திருவிழா தொடங்கியது. அப்போது முதன் முதலில் வாழ்க தமிழ் என்ற வாசகத்துடன் இருந்த காற்றாடி பறக்க விடப்பட்டது. அதன் பிறகு ஆக்டோபஸ், புலி, திமிங்கலம், கார்ட்டூன் நட்சத்திரங்கள் வடிவிலான பட்டங்கள் லிப்டர் வசதியுடன் பறக்கவிடப்பட்டன.
குடும்பம், குடும்பமாக வந்த மக்கள்
லிப்டர் என்பது முதலில் ஒரு கயிற்றில் 4 குழாய் இணைத்து இருப்பது போன்ற பலூனாகும். இது காற்றின் வேகத்தை தடுத்து நிறுத்தி மேலோங்கி பறக்க உதவும். அந்த லிப்டரை கட்டிய கயிற்றின் கீழ் பகுதியில் காற்றாடிகள் கட்டி பறக்க விடப்பட்டன. இப்படி கடற்கரையில் 17 காற்றாடிகள் பறக்க விடப்பட்டது. அவற்றை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அங்கு வந்து கண்டுகளித்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கூட்டமாக வந்து பறக்க விடப்பட்ட காற்றாடிகள் தெரியும் வகையில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து மகிழ்ந்தனர்.
அந்த சமயத்தில் சோட்டா பீம் என்னும் கார்ட்டூன் நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரமான டோலு, போலு வடிவிலான காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. காற்றின் வேகம் அதிகரித்ததால், கயிறு கட்டு அறுந்து டோலுவின் காற்றாடி கடற்கரையில் நீண்ட தூரம் பறந்து சென்றது. உடனே காற்றாடியை இயக்குபவர்கள் சில வாலிபர்களின் உதவியுடன் அந்த காற்றாடியை ஓடிச் சென்று கைப்பற்றினர். இந்த காற்றாடியை காண இரவு 7 மணி வரை கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.
இந்த காற்றாடி திருவிழா இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சங்குத்துறை கடற்கரையில் நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிறது.
போக்குவரத்து பாதிப்பு
காற்றாடி திருவிழாவை காண நேற்று சங்குதுறை கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிந்தனர். அவர்கள் வந்திருந்த கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்கரை சந்திப்பு முதல் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு வரை செல்லும் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் இல்லாததால் வாகனங்கள் கடற்கரை சாலையில் ஊர்ந்து சென்றன. இதனை தொடர்ந்து சில வாலிபர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு மாலை 5.30 மணி முதல் 1 மணி நேரம் 6.30 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.