< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம் புதிய மாவட்டமாக உதயமாகுமா?
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம் புதிய மாவட்டமாக உதயமாகுமா?

தினத்தந்தி
|
24 Nov 2022 1:40 AM IST

விருத்தாசலம் புதிய மாவட்டமாக உதயமாகுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட தொகுதியாக விருத்தாசலம் விளங்கி வருகிறது. விருத்தாசலம் தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகள், மங்கலம்பேட்டை பேரூராட்சி, கம்மாபுரம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளும், நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 29 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மாவட்ட தலைநகரான கடலூரில் உள்ள கலெக்டா் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், துறைமுகம் ஆகிய 3 அம்சங்கள் மட்டுமே இல்லை. மற்ற அனைத்து வசதிகளும் நிரம்பி கிடக்கிறது. விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்து விட்டால் மேலும் பல அரசு அலுவலகங்கள் கட்ட அதிகளவு இடவசதியும் உள்ளது.

புதிய மாவட்டம்

அதனால் விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம், சிறுபாக்கம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு கடலூர் மாவட்டத்தை 2-ஆக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்த முழக்கம் இன்றல்ல, நேற்றல்ல, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாக இருந்த அந்த காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது.

ஓங்கி ஒலிக்காத குரல்

மாவட்டத்திற்குரிய அனைத்து தகுதிகளும் விருத்தாசலத்திற்கு உண்டு. ஆனால் விருத்தாசலத்திற்கு பிறகு உருவான நகரங்களான விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி நகரங்கள் தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டிருக்க, விருத்தாசலம் வளர்ச்சியின் பாதையில் செல்லாமல் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதுதான் உண்மை.

விருத்தாசலம் தனிமாவட்டமாக உருவாக வேண்டும் என்ற முழக்கம் வெற்று முழக்கம் இல்லை. இதற்கு பல காரணங்களை கூறினாலும், மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஓங்கி ஒலிக்காதது தான் ஒரே காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் இணைந்து 'விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம்' என்ற இயக்கத்தை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கானல் நீராகும் வாக்குறுதி

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போம் என்ற வாக்குறுதியை முதன்மையாக முன்வைத்தே போட்டியிட்டனர். இதனால் விருத்தாசலம் மாவட்டமாக உதயமாகும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அரசியல் கட்சிகள் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்போம் என்று வாக்குறுதி அளிப்பதும், பிறகு வெற்றி பெற்றதும் அந்த வாக்குறுதி கானல் நீர் போல மறைந்து விடுவதும் தொடா் கதையாக உள்ளது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கடலூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்களூர் ஒன்றியத்தில் சிறுபாக்கம், லட்சுமணாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளுக்கு அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மிகவும் தாமதமாகவே சென்றடைகின்றன. சில சமயங்களில் எந்த திட்டங்களும் சென்றடைவதே இல்லை என்பதே இப்பகுதி மக்களின் பெரும் புகாராக உள்ளது. உயா் அதிகாாிகள் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை பேரூராட்சிகள், மங்களூர், நல்லூர் ஒன்றியங்களை கண்டுகொள்ளாததால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் தங்கள் இஷ்டம் போல பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதனால் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உதயமாகுமா? என இப்பகுதி மக்கள் தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுகுறித்து விருத்தாசலம் பகுதி மக்கள் தங்கள் கருத்துகளை தொிவித்து உள்ளனா். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நலிவடையும் தொழில்

கவிதா:-

விருத்தாசலம் நகரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளை பெற்று தன்னிறைவு பெறுவதற்காகத்தான் நாங்கள் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டிலேயே செராமிக் தொழிற்பேட்டை, செராமிக் தொழில் கல்லூரி அமைந்துள்ள பகுதியாக விருத்தாசலம் உள்ளது. மாவட்டம் என்ற ஒரு தகுதி இல்லாததால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.

வேலைவாய்ப்பு

முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரராஜன்:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரூராட்சியாகத்தான் இருந்தது. ஆனால் விருத்தாசலம் நகராட்சியாக மாறி 30 ஆண்டுகளாகிவிட்டது. கள்ளக்குறிச்சிக்கு விருத்தாசலம் நகரத்தில் உள்ள அஞ்சல்துறை அலுவலகம்தான் தலைமை அலுவலகமாக உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு தற்போது தனிமாவட்டமாக உதயமாகியும், விருத்தாசலம் அதே நிலையில் தான் இருக்கிறது.

வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில்களும், தொழிற்சாலைகளும் நிறைந்துள்ள விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்தால் இப்பகுதி மேலும் தன்னிறைவை பெறும்.

மாவட்ட நீதிமன்றம்

வக்கீல் அப்துல்லா:-

விருத்தாசலம் மாவட்ட தலைநகராக மாறுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு தொழில்நகரமாகும். விருத்தாசலத்தில் 8 நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. இதில் மாவட்ட நீதிமன்றம் மட்டுமே கடலூரில் உள்ளது.

மாவட்டமாக தரம் உயர்ந்தால் மாவட்ட நீதிமன்றமாக மாறுவதற்கான அனைத்து வசதிகளும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் உள்ளது.

இதேபோல விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. மாவட்டமாக தரம் உயர்ந்தால் மாவட்ட மருத்துவமனையாக அரசால் தரம் உயர்த்தப்படும். எனவே விருத்தாசலம் மாவட்டமாக உயர்ந்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள்.

நம்பிக்கை

எழுத்தாளர் இமயம்:-

கடலூரை இரண்டாக பிரித்து நான்கு தொகுதிகளை உள்ளடக்கி விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான மக்களின் விருப்பமாக உள்ளது. திட்டக்குடி வட்டம் அரசங்குடியில் இருந்து 120 கி.மீ. தொலைவில் கடலூர் இருப்பதால் பயண நேரமும், செலவும் அதிகமாகிறது. 20 லட்சம் பேருக்கு ஒரு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் இருப்பதை விட 10 லட்சம் பேருக்கு ஒரு கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலரும் இருந்தால் அந்தப் பகுதி சிறப்பான வளர்ச்சியை அடையும். அதனால் விரைவில் விருத்தாசலம் மாவட்டம் உதயமாகும், என்ற நம்பிக்கை உள்ளது.

சுற்றுலா தலம்

பாலாஜி குருக்கள்:-

விருத்தாசலம் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டால் விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆன்மிக சுற்றுலா தலமாக மாறும்.

மாவட்டம் என்ற ஒரு அந்தஸ்து மட்டும் இல்லாததால், புண்ணிய நதியான விருத்தாசலம் மணிமுக்தாறு மற்றொரு கூவமாக மாறி வருகிறது. இந்த மணிமுக்தாறு மீண்டும் புண்ணிய நதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

வளமான பகுதி

ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த்:-

கடந்த 2017-ம் ஆண்டில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் விருத்தாசலம் நகராட்சி, திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை பேரூராட்சிகளில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை, வருவாய், நிலப்பரப்பு ஆகிய அனைத்து தகுதிகளும் உள்ளதால் விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அமைக்க தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

ஒரு மாவட்டம் அமைவதற்கு தேவையான அனைத்து அரசு அலுவலகங்களும் விருத்தாசலத்தில் உள்ளன. மேலும் அரசு அலுவலகங்கள் அமைக்க தேவையான இடங்களும் விருத்தாசலத்தில் உள்ளன. அதனால் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்தால், இப்பகுதி மிகவும் வளமான பகுதியாக மாறும்.

மேலும் செய்திகள்