< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்கப்படுமா?
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
3 Jan 2023 12:15 AM IST

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், டி.ஐ.ஜி. அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களும் உள்ளன. இதுபோன்று வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக விழுப்புரத்தில் ஒரே வளாகத்தில் அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அரசின் பல்வேறு உதவிகளை பெற அரசு அலுவலகங்களை எளிதாக நாடிச்செல்கின்றனர்.

நடைபாதையுடன் கூடிய பூங்கா

இங்குள்ள பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் முகாம் அலுவலகத்தின் எதிரே நடைபாதையுடன் கூடிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவினுள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் வசதியாக கிரானைட் கல் இருக்கைகள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவினுள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். . அதுமட்டுமின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் அவ்வப்போது இந்த பூங்காவில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

இந்த பூங்காவின் மையப்பகுதியில் பூஞ்செடிகள், புல்தரைகள், விளையாட்டு உபகரணங்கள் என பூங்காவிற்கு தேவையான எந்தவொரு வசதிகளும் செய்யப்படாததால் மண் தரையாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் இப்பூங்காவின் மையப்பகுதியில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரில் பாசி படர்ந்தும், கொசுக்கள் உற்பத்தியாகியும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதன் காரணமாக வழக்கமாக இந்த பூங்காவினுள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமே பயன்பட்டு வரும் இந்த பூங்காவின் தற்போதைய அவலநிலையால் நாளுக்கு நாள் நடைபயிற்சி மேற்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாலானோர், பூங்காவிற்குள் வருவதை தவிர்த்துவிட்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக சாலைகளிலேயே நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிடும்

மேலும் இந்த பூங்காவின் பல இடங்களில் முட்புதர்கள் சூழ்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாம்புகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக பூங்காவிற்கு வருபவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். அதுபோல் இந்த பூங்காவில் குடிநீர் வசதியும் கிடையாது. கழிவறை வசதி இருந்தும் பல சமயங்களில் அந்த கழிவறை பூட்டியே கிடக்கிறது.

இப்பூங்காவை பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி விடும். எனவே அதற்கு இடம் அளிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு பூங்காவில் அழகிய பூஞ்செடிகள் நடுவதோடு, புல்தரைகள் அமைக்க வேண்டும். மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் மற்றும் செயற்கை நீருற்றுகள் அமைத்து பூங்காவை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அசுத்த காற்று

இது குறித்து விழுப்புரத்தை சேர்ந்தலட்சுமிநாராயணன் கூறும்போது, விழுப்புரம் நகர மக்கள் பலரும் இந்த பூங்காவினுள் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. ஆனால் இந்த பூங்காவினுள் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இயற்கையான காற்றை சுவாசிக்கத்தான் காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். ஆனால் இப்பூங்காவில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் அசுத்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் பலருக்கு இந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் இங்கு பெரும்பாலானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வருவதில்லை. இந்த பூங்காவினுள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்றார்.

அடிப்படை வசதி இல்லை

விழுப்புரத்தை சேர்ந்த வினோத் கூறுகையில், விழுப்புரம் நகரில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சிறந்த இடமாக இந்த பூங்கா உள்ளது. ஆனால் இந்த பூங்காவில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை, மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை வேளைகளில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் கொசுத்தொல்லை காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள சிரமமாக இருக்கிறது. அரசு அதிகாரிகள் பலரும் நடைபயிற்சி மேற்கொள்ள இந்த பூங்காவை பயன்படுத்துகின்றனர். ஆனால் பூங்காவை பராமரிக்க எந்தவொரு அதிகாரியும் முயற்சி மேற்கொள்ளாதது வேதனையாக இருக்கிறது. எனவே அனைத்து அடிப்படை வசதிகளுடன் இந்த பூங்காவை விரைவில் பராமரிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்