கரூர்
வேலாயுதம்பாளையம் சிறுவர் பூங்கா திறக்கப்படுமா?
|நடைபயிற்சி மற்றும் அன்றைய பொழுதை கழிக்க வேலாயுதம்பாளையம் சிறுவர் பூங்கா திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பூட்டியே கிடக்கும் பூங்கா
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புஞ்சை புகழூர் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் விளையாட்டு திடலுடன், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்கள், சிறுமியர்கள் விளையாடுவதற்கு பல்வேறு உபகரணங்கள் இருந்தது. பெரியவர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு உபகரணங்கள், நடைபயிற்சி செய்வதற்கு ஏற்ற தரைத்தளம் அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது நீண்ட நாட்களாக பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், அன்றாட பொழுதை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
சந்தோஷமாக இருந்தது
வேலாயுதம்பாளையம் மலைநகரை சேர்ந்த பழனியப்பன்:-பூங்கா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவால் மலைநகரான எங்கள் ஊருக்கு பெருமையாக இருந்தது. ஏனென்றால் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக கூடுவது இந்த இடத்தில் தான். இந்த பூங்கா இருந்தபோது, எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். நாங்கள் அனைவரும் தினமும் இங்கு சந்திப்போம். எங்களது அன்றாட விஷயங்களை இங்கு வந்துகூடி பேசி ெகாள்வோம். இந்த பூங்காவிற்கு நாங்கள் வரும்போது குழந்தைகள் விளையாடுவதை பார்த்து நாங்களும் குழந்தையாக மாறி விடுவோம். அவ்வளவு சந்தோஷம் இருந்தது. எனவே உடனடியாக இந்த பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபயிற்சி செல்ல சிரமம்
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம்:-மலைநகரில் இருந்த பூங்காவில் மாலை நேரங்களில் அதிக கூட்டம் வரும். ேமலும் பொதுமக்கள் பலர் தங்களது நண்பர்களுடன் வந்து பூங்காவில் உள்ள இயற்கை காற்றை ரசித்து கொண்டே ஜாலியாக பேசி கொள்வார்கள். இங்கு வந்தால் அன்றைய தினமும் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷ நிலைக்கு சென்று விடுவோம். தற்போது இந்த பூங்கா இல்லாமல் நடைபயிற்சி செல்வதற்கே சிரமமாக உள்ளது. எனவே இந்த பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் உதவியாக இருந்தது
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கலியமூர்த்தி:-மலைநகரில் நல்ல இயற்கை அழகுடன் பூங்கா இருந்தது. இங்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது பொழுதை கழித்து செல்வார்கள். மேலும், நடைபயிற்சி மேற்கொள்ள அனைவருக்கும் உதவியாக இருந்தது. சிறுவர், சிறுமியர் விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். எனவே பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும்.
பொழுதை கழித்தேன்
மலைநகரை சேர்ந்த ராஜேந்திரன்:-
மலைநகரில் பூங்கா இருந்த போது நான், என் மனைவி, குழந்தைகளுடன்சென்று அங்குள்ள சிமெண்டு நாற்காலில் அமர்ந்து மாலை நேரத்தில் செய்யப்பட்ட பலகாரத்தை சாப்பிட்டு பொழுதை கழித்து வந்தேன். தற்போது அப்படி சந்தோஷமான நிலை மீண்டும் வராதா? என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன். பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் இந்த பூங்காவை திறந்தால் நல்ல காலம் வரும் என்பது நிச்சயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.