< Back
மாநில செய்திகள்
தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் வருமா?பொதுமக்கள் கருத்து
தேனி
மாநில செய்திகள்

தென்மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' வருமா?பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
1 April 2023 12:15 AM IST

தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் வருமா என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தபால் துறை, தொலைதொடர்பு துறை, ரெயில்வே துறை போன்ற அன்றாடம் நம்மோடு பயணிக்கும் துறைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கி போனது.

கடந்த 76 ஆண்டுகளில் அந்தத் துறைகளை நாம் எந்த அளவில் நவீனமயமாக்கி இருக்கிறோம் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

குறிப்பாக ரெயில்வே துறையை எடுத்து கொண்டால் நீராவி என்ஜினில் ரெயிலை இயக்கி பிறகு டீசல், மின்சாரம் என வளர்ந்து தற்போது நடுத்தர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயில்கள், டிரைவர்களே இல்லாமல் இயங்கவிருக்கும் நவீன ரெயில் என்ற அளவிற்கு உயர்ந்து வருகிறோம். விரைவில் புல்லட் ரெயில்களும் இந்தியாவில் இயக்கும் நிலை ஏற்படும்.

வந்தே பாரத்

வந்தே பாரத் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே நடுத்தர வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்தியாவில் முழுக்கமுழுக்க உள்நாட்டில் தயாரிக்கும் ('மேக் இன் இந்தியா') திட்டத்தின் கீழான முன்னெடுப்பில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வே வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

1,148 இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் 2 உயர் வகுப்பு பெட்டிகளும், 14 சாதாரண வகை பெட்டிகளும் உள்ளன. இவை அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். இந்த ரெயிலில் என்ஜின் என்று தனியாக இருப்பதில்லை. டிரைவர்களுக்கு என்று ஒரு சிறிய அறை (கேபின்) மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பெட்டிகளுக்கு கீழேயும் என்ஜின் இருப்பதால் சீரான வேகம் அதிகரிப்பு, சீரான வேகம் குறைப்பு போன்றவை முறையாக நடைபெறும். இதனால் பெட்டிகளில் பயணம் செய்யும் போது அதிவேகத்தில் சென்றாலும் அதிர்வோ, குலுங்கலோ எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை பயணத்தின் போது பயணிகள் உணரமுடியும். அதேநேரம் என்ஜின் டிரைவர் கேபினில் இருந்து கடைசி பெட்டியில் உள்ள ரெயில் கார்டு அறை வரை பயணிகள் செல்ல முடிகிறது.

சென்னை-கோவை

சென்னை-மைசூரு இடையே இந்த ரெயில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் கோவை-சென்னை இடையே வருகிற 8-ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் வருமாறு:-

உரிய நடவடிக்கை

மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இரா.பாண்டியராஜா கூறும் போது, 'சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால்தான் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்களை விட வேண்டும் என்று ஆர்வம் காண்பிப்பார்கள். ஆனால் ரெயில்களை விடுவதில்லை. தற்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் இந்தப்பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் வசிக்கின்றனர். எனவே அனைவருடைய நலன் கருதி சென்னை- கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

சுற்றுலா வளர்ச்சி

உப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஜெகன் கூறும்போது, 'தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோவில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

வந்தே பாரத் ரெயில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயன்பெற முடியும். பயண நேரம் குறைவதால் அதிக இடங்களை சுற்றிப் பார்க்க முடியும். அதுபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறுவார்கள்' என்றார்.

பணம்-நேரம் மிச்சம்

கம்பத்தை சேர்ந்த முன்னாள் மதுரை மண்டல ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பொன்காட்சிக்கண்ணன் கூறும்போது, 'தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும். ஒரே நாளில் டெல்லிக்கு செல்ல முடியும் என்பதால் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் செலவினம் குறையும். பயண நேரம் குறைவதால் பயணங்கள் அதிகம் ஆகும்.

விமான பயணம் செய்யும் போது விமானம் ஏறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. வந்தே பாரத் ரெயில் மூலம் நேரமும், பணமும் மிச்சமாகும். தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டும் என்றால் விமானத்தில் அதிக செலவு செய்தோ அல்லது ரெயிலில் ஓரிரு நாட்கள் பயணம் செய்தோ வர வேண்டியது உள்ளது. மதுரை-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

தென் மாவட்டங்கள் நலன்

கம்பத்தை சேர்ந்த வக்கீல் கவுதம் கூறும்போது, 'மதுரை வழியாக சென்னை-கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே பட்ஜெட்டின்போது 4 புதிய ரெயில்கள், 5 புதிய ரெயில்கள் என்று அறிவிப்பு வெளியாகிறது. அந்த ரெயில்கள் அனைத்தும் சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்வதாகத்தான் இருக்கின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களாக இருப்பதில்லை.

இதனால் தென்மாவட்டத்தினருக்கு போதிய ரெயில் வசதி இல்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் வந்து உள்ள நிலையில் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ரெயில்களில் பயணிக்கின்றனர். பொதுமக்கள் செல்வதாக இருந்தால் 100 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இல்லை என்றால் தட்கல், பிரீமியம் தட்கல் என்று அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரெயில்களை தென் மாவட்டங்கள் நலன் கருதி இயக்க வேண்டும்' என்றார்.

அனைத்தும் மாறும்

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும் போது, 'நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் பெயர் கொண்ட 16 பெட்டிகளுடன் ஒரு ரெயில் தயாரிக்க ரூ.110 கோடி செலவாகிறது. தொடர்ந்து தயாரிக்கும் போது, தயாரிப்புச் செலவுகள் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்வதைவிட இந்தியாவில் தயாரித்தால் 40 சதவீதம் விலை குறைவாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ஓடும் அனைத்து ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றப்படும். குறிப்பாக பெருநகரங்களுக்கு இடையே ஓடும் சதாப்தி மற்றும் நீண்ட தூரம் செல்லும் ராஜ்தானி ஆகிய ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. தற்போது வந்தே பாரத் ரெயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன. வரும் காலங்களில் படுக்கை வசதியும் செய்து தரப்பட உள்ளது' என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்