< Back
மாநில செய்திகள்
டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கையால் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் ஏற்படுமா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்
மாநில செய்திகள்

டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கையால் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் ஏற்படுமா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்

தினத்தந்தி
|
13 Aug 2023 5:20 AM IST

பாதுகாப்பு மாநில அரசின் கையில் இருப்பதைவிட மத்திய அரசின் கையில் இருந்தால் மட்டுமே அன்னிய சக்திகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்புவதால் அ.தி.மு.க. மசோதாவை ஆதரித்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை கலந்து கொண்டு பேசுகிறார். அதில், டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை ஆதரித்தது பற்றி பேசுகையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்றுதான் அண்ணா வழியில் வந்த திராவிட கட்சிகள் போராடி வருவதாகவும், அதே நேரத்தில் டெல்லியை பொறுத்தவரையில் அதன் பாதுகாப்பு மாநில அரசின் கையில் இருப்பதைவிட மத்திய அரசின் கையில் இருந்தால் மட்டுமே அன்னிய சக்திகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்புவதால் அ.தி.மு.க. மசோதாவை ஆதரித்ததாக விளக்கம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது எத்தனை கட்சிகள் உள்ளன? என்பது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கையில், பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேசிய அளவில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் நீடிப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இல்லை என்று அவர்கள் கூறினாலும், ஏதோ ஒரு வகையில் அவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதற்கு முழு வடிவம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்குமான மோதல் குறித்து பேசுகையில், அண்ணாமலை அவரையும், அவரது கட்சியையும் முன்னிலைப்படுத்தவே பாதயாத்திரை செல்வதாகவும், இதில் நாங்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறிய அவர், தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இஸ்லாமியர்கள் மோடியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்துள்ளதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா விவகாரத்தில் உண்மை நிலை என்ன? மணிப்பூர் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு? எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எதிர்க்காதது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் செம்மலை பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்